தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளுடன் மல்லுக்கட்டினர்.

Update: 2018-04-19 22:30 GMT
தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ளது ஆறாவயல் சண்முகநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற வீரமகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாவையொட்டி கோவில் அருகே உள்ள மைதானத்தில் நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்பதற்காக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டன. அதேபோல் மாடுபிடி வீரர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த மஞ்சுவிரட்டில் 20-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப் பட்டன. வடமாடு மஞ்சுவிரட்டில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நீளமான வடகயிற்றால் கட்டப்பட்டிருக்கும் காளையை அடக்க வேண்டும் என்று விதிமுறை தீர்மானிக்கப்பட்டது. மேலும் 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குழு ஒவ்வொரு சுற்றுகளாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டு, காளைகளை அடக்க அவர்களுக்கு 25 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.

இந்த மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுதவிர சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிப்பட்டது. சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் வெற்றி பெற்று பரிசுகளை தட்டிச்சென்றது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆறாவயல் சண்முகநாதபுரம் கிராமமக்கள் செய்திருந்தனர்.

முன்னதாக மஞ்சுவிரட்டையொட்டி அன்னதானம் மற்றும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்டு போட்டியை ரசித்தனர்.

மேலும் செய்திகள்