பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி

விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

Update: 2018-04-19 22:30 GMT
சிவகங்கை, 

கல்வி மாவட்ட அளவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உலக திறனாய்வுத்திட்ட தடகள போட்டிகளில் முதல் 10 இடங்களை பிடித்த 6, 7, 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அளவில் விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சிவகங்கை மற்றும் தேவகோட்டையில் நடைபெற உள்ளது. சிவகங்கை கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கிலும், தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும்.

இதுதவிர சிவகங்கை மாவட்ட அளவிலான 16 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை 21 நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் உலகத்திறனாய்வு திட்ட இருப்பிட பயிற்சி முகாம் அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 15 நாட்கள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி முகாமில் சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான உலகத்திறனாய்வு தடகளப் போட்டிகள் மற்றும் மண்டல அளவிலான உலகத்திறனாய்வு தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் உணவு, உறைவிடம் மற்றும் சிறந்த பயிற்சி அளிக்கப்படும். மேலும் சான்றிதழ்கள் மற்றும் சீருடை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்