ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகள் திருட்டு
திருவாடானை அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
தொண்டி,
திருவாடானை அருகே உள்ள ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் நீதியானந்தன் (வயது 48). சின்னக்கீரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது திருவாடானை அருகே உள்ள எல்.கே.நகர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி வீட்டு அவருடைய உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.30,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர். இந்த நிலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது நகை, பணம் திருட்டு நடந்துள்ளதை கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.
உடனே அவர் இதுகுறித்து திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புவனேசுவரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.