குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி கூட்டுக்குடிநீர்

பரமக்குடி ஆற்றுப்பாலத்தின் கீழ் குழாய் உடைப்பால் காவிரி கூட்டுக்குடிநீர் வீணாகி தேங்கி நிற்கிறது.

Update: 2018-04-19 22:15 GMT
பரமக்குடி, 

பரமக்குடியில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஏராளமான வீடுகளில் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. பல லட்சம் ரூபாய் செலவில் சுமார் 450 அடி முதல் 500 அடி வரை புதிதாக ஆழ்குழாய் அமைக்கின்றனர். இதேபோன்ற நிலை பரமக்குடி நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தெருக்குழாய்களிலும் உள்ளது. குடிநீருக்காக மக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரமக்குடி ஆற்றுப்பாலத்தின் கீழ் சர்வீஸ் சாலையோரம் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

இந்த தண்ணீர் குளம்போல அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் இரவு பகலாக குடிநீர் வீணாகி தேங்கி நிற்கிறது. இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்