பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 2–ந்தேதி விவசாயிகள் ரெயில் மறியல்

பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வருகிற 2–ந்தேதி (புதன்கிழமை) ரெயில் மறியலில் ஈடுபடுவது என்று தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-04-19 21:00 GMT
கோவில்பட்டி, 

பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் வருகிற 2–ந்தேதி (புதன்கிழமை) ரெயில் மறியலில் ஈடுபடுவது என்று தமிழ் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

மாநில அமைப்பாளர் காளிராஜ், மாநில துணை தலைவர் நம்பிராஜ், மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், வக்கீல் முத்துகுமார், துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:–

2–ந்தேதி, ரெயில் மறியல்

கடந்த 2016–2017–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. ஒரு கிராமத்துக்கு அதிகமாகவும், மற்றொரு கிராமத்துக்கு குறைவாகவும், ஒரே கிராமத்துக்குள்ளே விவசாயிகளுக்கு பாரபட்சமுடன் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை துறையினர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும்.

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் உள்ள 16 கிராமங்களில் மக்காச்சோளம் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தாமதம் செய்யாமல் உடனே இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு தொகையை சீராக வழங்க வலியுறுத்தி, வருகிற 2–ந்தேதி (புதன்கிழமை) கோவில்பட்டியில் ரெயில் மறியலில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தரமற்ற உரமூட்டை

கூட்டத்தில் கோவில்பட்டி குருமலையைச் சேர்ந்த விவசாயி லட்சுமண பாண்டியன் பேசுகையில், கோவில்பட்டி கழுகாசலபுரம் உரக்கடையில் வாங்கிய 50 கிலோ காம்ப்ளக்ஸ் உர மூட்டையில் குப்பையும், மணலுமாக உள்ளது என்று கூறி, அந்த உர மூட்டையை எடுத்து காண்பித்தார். இதுதொடர்பாக வேளாண்மை துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அந்த உர மூட்டையை வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் வழங்கி, அதனை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்