பாளையங்கோட்டையில் ஊர்க்காவல் படைவீரர்கள் தேர்வு
பாளையங்கோட்டையில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்க்காவல் படைவீரர்கள்
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலைய பகுதிகளில் பணியாற்ற உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆண்கள் 34 பேரும், பெண்கள் 11 பேரும் தேவைப்பட்டனர்.
இந்த பணியில் சேர விரும்புகிறவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், நல்ல உடல் தகுதி உடையவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு பணி வழங்கப்படும். பணிக்காலத்தில் ரூ.500 மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
தேர்வு
இந்த நிலையில் ஊர்காவல் படைவீரர்கள் தேர்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதில் 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் தலைமையில் நடந்தது.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன், ஊர்க்காவல் படை தளபதி வினோத் வின்சென்ட், ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வுக்கு வந்தவர்களின் கல்வி சான்றிதழ்கள், உடற்தகுதி ஆகியவை சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட்டு, பணி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.