லாரியை ஏற்றி என்னை கொல்ல முயற்சி மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டு

லாரியை ஏற்றி என்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றம்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2018-04-18 23:48 GMT
பெங்களூரு,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை மந்திரியாக இருந்து வருபவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு கார்வார் மாவட்டம் சிர்சியில் இருந்து காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார்.

ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் அருகே கெலகேரி சர்வீஸ் ரோட்டில் இரவு 10 மணியளவில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் காரும், அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீசாரின் வாகனமும் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரி, போலீசார் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியது.


லாரி மோதிய வேகத்தில் பாதுகாப்பு வாகனத்தின் முன்பகுதி நொறுங்கியது. இதில், 2 போலீசார் காயம் அடைந்தார்கள். இதுதொடர்பாக லாரி டிரைவர் உள்பட 2 பேரை ராணிபென்னூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாகவும், ஆனால் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து விட்டதாகவும் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே தனது டுவிட்டரில் பதிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹாவேரியில் நான் பயணம் செய்த காரை குறியாக வைத்து ஒரு லாரி வேகமாக வந்தது. எனது கார் வேகமாக சென்றுவிட்டதால், பின்னால் எனது பாதுகாப்புக்காக வந்த வாகனம் மீது அந்த லாரி மோதியது. இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். லாரியை ஏற்றி என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.

இதன் பின்னணியில் பெரிய சதி இருக்கலாம். இதை போலீசார் பகிரங்கப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சம்பவத்தில் நான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். எனது கார் வருவதை பார்த்ததும் சாலையில் நின்று இருந்த அந்த லாரி டிரைவர் வேகமாக லாரியை ஓட்டி வந்து மோத முயற்சி செய்தார்.

இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே கூறினார். 

மேலும் செய்திகள்