சேலம் மாநகரில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
சேலம் மாநகரில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.;
சேலம்,
தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், கருணாநிதி மகளும் எம்.பி.யுமான கனிமொழி பற்றியும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவதூறாக சமூக வலைதளத்தில்(டுவிட்டர்) பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு சேலம் மாநகர தி.மு.க. செயலாளர் ஜெயக் குமார் தலைமையில் நிர்வாகிகள், பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. தலைவர் பற்றியும், தி.மு.க.வையும் தொடர்ந்து அவதூறாக விமர்சித்து வரும் எச்.ராஜாவை போலீசார் கைது செய்திட வேண்டும் என்றும், அவரை நாடு கடத்திட வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவரது உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அஸ்தம்பட்டி பகுதியில் திரண்ட மகளிர் அணியினர் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அஸ்தம்பட்டி போலீசார் தி.மு.க. மகளிர் அணியை சேர்ந்த வசந்தா மயில்வேல், மாநகர துணை செயலாளர் லலிதா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர்.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பெரியார் சிலை அருகில் மாநகர தி.மு.க. இளைஞர் அணியினர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்தும் குரல் எழுப்பினர்.
இதுபோல சேலம் 5 ரோடு, தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தி.மு.க.வினர் எச்.ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் அம்மாபேட்டையில் நடந்த உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் தி.மு.க.வினர் 28 பேரை அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர்.