திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியன்று கிரிவலப்பாதைக்கு செல்ல இலவச பஸ் ஆட்டோக்களுக்கான கட்டணமும் நிர்ணயம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியன்று வரும் பக்தர்கள் கிரிவலப்பாதைக்கு செல்வதற்காக இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் ஏறும்போது அதற்கான கட்டணத்தை நிர்ணயித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். சித்ரா பவுர்ணமி கூடுதல் சிறப்பு வாய்ந்ததால் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. அன்று பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வர அனுமதிக்கப்படவில்லை. தற்காலிக பஸ் நிலையங்கள் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அங்கிருந்து பயணிகள் கிரிவலம் புறப்படும் இடத்திற்கு ஆட்டோக்களில் தான் வர முடியும். ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்பதை தடுக்க மாவட்ட நிர்வாகமே தலையிட்டு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
அத்தியந்தல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரி மைதானம் வரையும் (பெரும்பாக்கம்), அத்தியந்தல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அங்காளம்மன் கோவில் வரையும், திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரையும் ஆட்டோவில் தனி நபர் கட்டணம் ரூ.20 வசூலிக்க வேண்டும்.
வேட்டவலம் தற்காலிக பஸ் நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பஸ் நிலையம் வரையும், திருக்கோவிலூர் தற்காலிக பஸ் நிலையம் முதல் அங்காளம்மன் கோவில் வரையும், மணலூர் பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோவில் வரையும், அரசு கலை கல்லூரி முதல் அங்காளம்மன் கோவில் வரையும், திண்டிவனம் ரோடு தற்காலிக பஸ் நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரையும், திண்டிவனம் ரோடு தற்காலிக பஸ் நிலையம் முதல் காந்தி நகர் பைபாஸ் ரோடு 6 வது குறுக்கு தெரு வரையும், நல்லவன்பாளையம் முதல் அங்காளபரமேஸ்வரி கோவில் வரையும் தனிநபர் ஆட்டோ கட்டணமாக ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் வருகிற சித்ரா பவுர்ணமி விழாவுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் கிரிவல பாதையில் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்களுக்கான இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதைக்கு வருவதற்கு இலவசபஸ்வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.