தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 20½ பவுன் தங்க நகைகள் மீட்பு

கரூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20½ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2018-04-18 22:45 GMT
கரூர்,

கரூர் டவுன் எஸ்.பி. நகரை சேர்ந்த கந்தசாமி (வயது50) என்பரவது வீட்டில் சமீபத்தில் 19 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது. இதேபோல ராமகிருஷ்ணபுரத்தில் பிரதீப் வீட்டில் செல்போன், கேமரா மற்றும் ரூ.20 ஆயிரமும், அமிர்தாம்மாள் நகரில் தியாகராஜன் வீட்டில் 1½ பவுன் நகையும் திருட்டு போனது.

சின்ன ஆண்டாங்கோவிலில் சங்கீதா என்பவரது வீட்டில் ரூ.12 ஆயிரம் கொள்ளைபோனது. கரூர் டவுன் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்ததால் மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே லந்தக்கோட்டை பக்கம் ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்த வீரமணி (வயது21) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கரூரில் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம், செல்போன் மற்றும் கேமரா ஆகியவை மீட்கப்பட்டன. கைதான வீரமணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் நேற்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்