எச்.ராஜாவை கண்டித்து உருவபொம்மை எரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில், எச்.ராஜாவை கண்டித்து 4 இடங்களில் உருவபொம்மை எரிக்கப்பட்டது.

Update: 2018-04-18 22:30 GMT
திண்டுக்கல், 

பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவருடைய மகள் கனிமொழி ஆகியோரை பற்றி அவதூறாக பதிவிட்டதாக கூறி நேற்று பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவர் பசீர் அகமது தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது எச்.ராஜாவை கண்டித்தும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அவருடைய உருவபொம்மையும் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதையடுத்து உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 40 பேரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் போலீசார் அவர்களை விடுவித்தனர். இதேபோல, பழனி பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது, எச்.ராஜாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பழனி நகர் போலீசார், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க. வினர் 60 பேரை கைது செய்தனர். இதையடுத்து பழனி-திண்டுக்கல் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக் கப்பட்டனர்.

இதேபோல கொடைக்கானலில் தி.மு.க. நகர செயலாளர் முகமது இபுராகிம் தலைமையில் எச்.ராஜாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த கொடைக்கானல் போலீசார் உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரத்தில், நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் உருவபொம்மையை எரித்த தி.மு.க.வினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்