பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-04-18 22:45 GMT
அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி மதிப்பெண்களுக்காக மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக நடக்க அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணை போனவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் நிர்மலா தேவியை கண்டித்தும் அவருக்கு துணை நின்றவர்களை உடனடியாக கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க கோரியும் இதில் சி.பி.ஐ. விசாரணை கோரியும் அருப்புக்கோட்டையில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மரக்கடை பஸ் நிறுத்தம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் ஜூலி, துணை பொதுச் செயலாளர் சிற்பி லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர்கள் மணிகண்டன், செந்தில், இளம் பெண்கள் செயலாளர் சரளா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்களான ராமச்சந்திரன், ஜோதிமுத்து, வைரமுத்து, பாலமுருகன், சோபனா, பாலமுருகன், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திலகபாமா பேசியதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்க கூடியது என்றாலும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவிகளுக்கும், நிர்மலாதேவிக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டும் கருதி அத்துடன் இந்த வழக்கை முடித்து கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவை கவர்னர் அறிவித்துள்ளார். இது பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சி தான். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட இவருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. கவர்னர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரி கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும்.

ஆனால் இது குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் இது தொடர்பாக விசாரிக்கவும், வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது,. பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் தான் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழி நடத்த நிர்மலா தேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சிக்கு பேராசிரியை அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் பயிற்சி வகுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கி தரப்பட்டிருக்கிறது. இதனை மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனர் ஒதுக்கி கொடுத்திருக்கிறார். அங்கு அவர் 10 நாட்களுக்கும் மேலாக தங்கி அவரது சொந்த வேலைகளை கவனித்திருக்கிறார்.

நிர்மலா தேவி செல்போன் உரையாடலில் பல்வேறு சலுகைகளை வாங்கி தருவதாக மாணவிகளிடம் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தபட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்