தண்டனைக்காக தன் மீதான குற்றத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் இலங்கை அகதி மனு

தண்டனைக்காக தன் மீதான குற்றத்திற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் இலங்கை அகதி மனு செய்துள்ளார்.

Update: 2018-04-18 23:15 GMT
ராமநாதபுரம்,

இலங்கை சிலாபம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன் மகன் டேவிட் என்ற கஜேந்திரநாத்(வயது 46). இலங்கையில் நடந்த விபத்தில் காயமடைந்த கஜேந்திரநாத்திற்கு ரத்தம் ஏற்றியபோது அதன்மூலம் எச்.ஐ.வி. கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவதியடைந்து வந்த கஜேந்திரநாத்திற்கு இலங்கையில் அதற்கான சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு சென்றால் உயர்தர சிகிச்சை பெற்று குணமடையலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கள்ளத்தோணியில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். அவரை மண்டபம் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியில் வந்த கஜேந்திரநாத் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பாதிப்பிற்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தங்க இடம் இல்லாததால் ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியுள்ள கஜேந்திரநாத் தான் தங்கியிருந்து சிகிச்சை பெற வசதியாக இலங்கை அகதிகள் முகாமில் இடமளிக்குமாறு நெல்லை கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்தநிலையில் நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றுவரும் கஜேந்திரநாத் இலங்கையில் வயது முதுமையால் அவதிப்படும் தந்தை சண்முகநாதனுடன் இறுதிக்காலத்தை கழிக்க விரும்புகிறார். கள்ளத்தனமாக இந்தியா வந்த குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான வழக்கில் போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதன்காரணமாக வழக்கு விசாரணையை முடித்து தந்தையை பார்க்க இலங்கை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தான் சிகிச்சைக்காக கள்ளத்தோணியில் வந்ததை ஒப்புக்கொண்டதால் உடனடியாக தன் மீதான குற்றத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், தன் மீதான வழக்கினை விசாரித்து தண்டனை வழங்கினால் அதனை முடித்து இலங்கை சென்று தந்தையின் இறுதிக்காலத்தில் துணையாக இருக்க முடியும். எனவே, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

இந்த கோரிக்கைக்காக ராமநாதபுரத்திற்கும், சிகிச்சைக்காக நெல்லைக்கும் தினமும் அலையாய் அலைந்து திரிந்து வருவதாகவும், தங்க இடமின்றி தவிப்பதாகவும் கண்ணீர் மல்க கூறினார். மேற்படி இலங்கை அகதி கஜேந்திரநாத்திற்கு நோய் பாதிப்பு ஒருபுறம் இருக்க வழக்கு தொடர்பாகவும், தங்க இடமின்றியும் பராரியாய் சுற்றித்திரிந்து அந்தந்த பகுதியில் கொடுப்பதை வாங்கி சாப்பிட்டும் வந்த நிலையில் தற்போது மனதளவில் பாதிக்கப்பட்டு செய்வதறியாது திகைத்து வருகிறார். உடனடியாக தன் மீதான குற்றத்திற்கு விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், அதுவரை தனக்கு தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்