மாணவிகளை பாலியலுக்கு பேராசிரியை அழைத்த விவகாரம்: ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும், முத்தரசன் பேட்டி

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை விவகாரத்தில் பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-04-18 22:45 GMT
சிவகங்கை,

இந்தியாவில் தற்போது விரும்பத்தகாத சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. காஷ்மீரில் சிறுமி ஆசிபா கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். இதேபோல் உத்தரபிரதேசத்தில் உதவி கேட்டு சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி, தன்னுடைய செல்போன் உரையாடலில் பல்வேறு உயர் பொறுப்பில் உள்ளவர்களை பற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த சம்பவத்தில் பேராசிரியையுடன் நின்றுவிடாமல் அதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சம்பவம் குறித்து பணியில் உள்ள ஐகோர்ட்டு நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. நடுவர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வெளியிட்டு அதுவும் அரசிதழில் வெளியான பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே தமிழகத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்