காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை: என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி என்.ஆர். காங்கிரஸ் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-04-18 23:30 GMT
காரைக்கால்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி என்.ஆர். காங்கிரஸ் சார்பில், காரைக்கால் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்கு முன்னாள் முதல்-அமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சந்திரபிரியங்கா, கோபிகா, அசோக் ஆனந்து, சுகுமாறன், ஜெயபால், செல்வம், என்.ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, பன்னீர்செல்வம், காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆனந்தன், உதயக்குமார், கோட்டுச்சேரி சுரேஷ், பாரிஸ்ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில், காரைக்கால் மாவட்டத்தில் மீண்டும் காவிரி நீர் கரைபுரண்டோடும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, நிருபர்களுக்கு ரங்கசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் பிரச்சினைக்காகவும், விவசாயிகளுக்காகவும் முதன்முறையாக என்.ஆர் காங்கிரஸ் சார்பில், காரைக்காலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடம், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேச நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். அவர் நேரம் ஒதுக்கும் பட்சத்தில், காரைக்கால் மாவட்டத்திற்கு காவிரி நீரின் அவசியம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசுவோம்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசுவது போல, காவிரி மேலாண்மை வாரியத்தில் என்.ஆர். காங்கிரஸ் நாடகம் எதுவும் நடத்தவில்லை. விவசாயிகள், மக்கள் பிரச்சினை என்றால், என்.ஆர். காங்கிரஸ் உடனே களத்தில் இறங்கி போராடும். அதைத்தான் செயலில் காட்டிவருகிறோம். போராட்டத்தில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை காட்டிலும் பொதுமக்களின் ஆதரவு அதிகம் இருப்பதை பார்க்கின்ற போது, மக்கள் எப்போதும் எங்களை நம்புகின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

இவ்வாறு ரங்கசாமி கூறினார். 

மேலும் செய்திகள்