சென்னை - பிரசல்ஸ் நகரங்கள் இடையே நட்புறவு ஒப்பந்தம்: தலைமை செயலகத்தில் கையெழுத்தானது

தகவல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக சென்னை - பிரசல்ஸ் நகரங்கள் இடையேயான நட்புறவு ஒப்பந்தம் தலைமை செயலகத்தில் கையெழுத்தானது.

Update: 2018-04-18 22:00 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தகவல் தொழில்நுட்பம், நிர்வாகத் திறன் பரிமாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் புரிந்துணர்வு ஏற்படவும் மற்றும் பொதுவான வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் சென்னை - பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் இடையே இந்த நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன், பிரசல்ஸ் நகர மண்டல மாநில செயலாளர் பியான்கா டிபேட்ஸ் ஆகியோர் நட்புறவு ஒப்பந்தத்தில் நேற்று கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் 2 நாடுகளின் சட்டத்திற்கு உட்பட்ட சமத்துவம், நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சவால்கள், நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார மேம்பாடு, சீர்மிகு நகரங்கள், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உள்ளூர் சமூகங்களை ஆதரிப்பது, அவசர காலத்தில் எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, பெரு நிறுவன சமூக பொறுப்பு, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழுக்கள் ஒருங்கிணைப்பது, பெண்கள் அதிகாரம், நகர்ப்புற சூழலில் குழந்தைகளின் உரிமைகள் ஆகியவை உள்ளடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலர் ஹர்மந்தர் சிங், பெல்ஜியம் நாட்டின் இந்திய தூதர் ஜேன் லுயிக்ஸ், தென்னிந்தியாவுக்கான பொது தூதர் மார்க் வான்டி ரெக்கன், பிரசல்ஸ் பிராந்திய பொது சேவைக்கான பொதுச்செயலாளர் கிறிஸ்டியன் லெமோலின் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்