அரியலூரில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அரியலூரில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-04-18 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை சுத்தப்படுத்தவும், கழிவு நீர் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணியில் 45 துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆணையர் மாற்றலாகி விட்டதால் காசோலையில் கையொப்பம் யார் இடுவது என்பதால் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பளம் கிடைக்காததால் துப்புரவு பணியாளர்கள் வாழ்க்கை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்கவில்லை.

உள்ளிருப்பு போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது துப்புரவு பணியாளர்கள் தங்களது சம்பளம் குறித்து உறுதியாக கூறினால் தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி சம்பளம் உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்