கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி: சமூக அமைப்புகளை சேர்ந்த 73 பேர் கைது

புதுவை கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 73 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-18 23:15 GMT
புதுச்சேரி,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றிய கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி (வயது 47) மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீதும் புகார் எழுந்தது. ஆனால் இதை அவர் கடுமையாக மறுத்துள்ளார்.

இந்தநிலையில் தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும், பேராசிரியை மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை கவர்னர் மாளிகையை மாநில திராவிடர் விடுதலை கழகத்தினர் முற்றுகையிடும் நோக்கில் செஞ்சி சாலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து அவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்திற்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், தந்தை பெரியார் விடுதலை கழக தலைவர் வீரமோகன், மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு இயக்க செயலாளர் சுகுமாரன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தை அடைந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுப்புகளை வைத்து அவர்களை தடுத்தனர். இதனால் அவர்கள் அந்த இடத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பேராசிரியை நிர்மலா தேவி ஆகியோரின் புகைப்படங்களை அவமதித்து தீ வைத்து கொளுத்தினர்.

இந்தநிலையில் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை நோக்கி அவர்கள் செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 73 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்