ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி நடந்தது
அவல்பூந்துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணி நடந்தது.
மொடக்குறிச்சி,
அவல்பூந்துறை நால்ரோட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இருந்த பயணிகள் நிழற்கூடை பழுதானது. அதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பயணிகள் நிழற்கூடை அமைக்க மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கினார். அதற்கான பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தது. அப்போது நிழற்கூடை அமைப்பதை எதிர்த்து சிலர் ஈரோடு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவல்பூந்துறை நால்ரோட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் மொடக்குறிச்சி தாலூகா நில அளவையர் ஆகியோர் அளவீடு செய்யும் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் அப்பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி மற்றும் அதன் பின்புறம் உள்ள கடைகள் ஆக்கிரமித்து கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் குறித்து அளவீடு செய்து குறியிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அவல்பூந்துறை நால்ரோட்டில் பெரும்பாலான சாலைகளில் ஆக்கிரமிப்பு உள்ளது. அதை கணக்கிட ஆய்வு நடத்தப்பட்டது. ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்கள் விரைவில் அகற்றப்படும்‘ என்றார்கள்.