ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை - பணம் கொள்ளை
ஈரோடு ரங்கம்பாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்தவர்கள் ஸ்கூட்டரையும் திருடிக்கொண்டு, அதில் தப்பி சென்றனர்.
ஈரோடு,
ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 59). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி பரிமளாதேவி. இவர்களுக்கு பிரியாவாணி, ரேஷ்மா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். கிருஷ்ணகுமாரும், பரிமளாதேவியும் ரங்கம்பாளையத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் தூங்கி கொண்டு இருந்தனர். அந்த அறையில் ஏ.சி. இணைக்கப்பட்டு இருந்ததால் கதவை மூடி இருந்தனர்.
பரிமளாதேவி நேற்று காலை எழுந்து தரைதளத்திற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தரைதளத்தில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் கலைந்து கிடந்தன. மேலும், பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தன. இதில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 40 பவுன் நகையும், ரூ.30 ஆயிரமும் கொள்ளை போய் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு கிருஷ்ணகுமார் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை நெம்பி திறந்து உள்ளனர். பின்னர் படுக்கை அறைக்கு சென்ற அவர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு வெளியே வந்து உள்ளனர். அப்போது, வீட்டின் வெளியே சாவியுடன் நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டரையும் திருடி, அதில் அவர்கள் தப்பிச்சென்று உள்ளனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் சென்று கதவு, பீரோ, சுவர் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.