கடலூரில் வீட்டில் ரூ.1½ லட்சம் நகை-பணம் திருட்டு
கடலூரில் வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூர் பாதிரிக்குப்பம் குமாரப்பேட்டை அசோக் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சந்திரா(வயது 50). இவரது மகன் நாராயணசாமி வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவிக்கு குழந்தை பிறந்ததையொட்டி நாராயணசாமி ஊருக்கு வந்திருந்தார். இதனால் தனது மனைவி-குழந்தையை பார்ப்பதற்காக காரைக்காலுக்கு சென்று விட்டார்.
இதன் காரணமாக சந்திரா மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவில் அவர் வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்.
அதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், நைசாக வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள ஒரு அறையில் மறைந்து கொண்டார். ஆனால் அவர் உள்ளே பதுங்கி இருந்ததை சந்திரா கவனிக்கவில்லை.
இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு, 2-வது தெருவில் உள்ள தனது மகள் பரமேஸ்வரி வீட்டுக்கு சென்று இரவில் தங்கி விட்டார். இதன்பிறகு, அந்த மர்ம நபர், வீட்டில் இருந்த 3 பீரோக்களையும் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தார். பீரோக்களில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு பின்பக்க கதவை திறந்துகொண்டு வெளியே சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பி வந்த சந்திரா, முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது பீரோக்கள் திறந்து கிடந்ததையும், துணிகள் சிதறி கிடந்ததையும், நகை-பணம் திருட்டு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.