நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
கடலூரில் கர்நாடகா அரசு பஸ் உடைப்பு வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடலூரில் கடந்த 10-ந்தேதி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கர்நாடகா அரசு பஸ்சை வழிமறித்து தாக்கி கண்ணாடியை உடைத்தனர்.
இந்த போராட்டம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உள்பட 7 பேரை கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர். இதில் கடல் தீபனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடல் தீபனின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் அரசு மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்த கடல் தீபனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொடுத்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் தண்டபாணி இந்த உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படி நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை கடலூர் மத்திய சிறையில் உள்ள அதிகாரிகள் மூலம் கடல் தீபனிடம் புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் வழங்கினார்.