திருவட்டார் பகுதியில் தொடர் கைவரிசை: 2 பேக்கரி கடைக்காரர்கள் கைது

திருவட்டார் பகுதியில் தொடர் கைவரிசை காட்டிய 2 பேக்கரி கடைக்காரர்களை கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் மூலம் 100 பவுன் தங்க நகைகளையும், ரூ.50 ஆயிரத்தையும் மீட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் ஆடம்பரமாக வாழ கொள்ளையர்களாக மாறியது குறித்த பரபரப்பு தகவல் தெரியவந்தது.;

Update: 2018-04-18 22:45 GMT
திருவட்டார்,

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே சுவாமியார்மடம் தெற்றை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ். அவருடைய மனைவி தங்கலீலா. இவர்களது வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1–ந் தேதி மாடிக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதேபோல், கடந்த மார்ச் மாதம் 1–ந் தேதி திருவட்டார் அருகே சாய்க்கோடு பகுதியை சேர்ந்த ஜெபராஜ் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஒரு இரும்பு பெட்டியை எடுத்து அருகில் உள்ள தோட்டத்தில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர்.

கடந்த மாதம் 21–ந்தேதி சுவாமியார்மடம் தெற்றை பகுதியை சேர்ந்த பால்தங்கம் என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துச் சென்றனர். கடந்த 1–ந்தேதி திருவட்டார் அருகே செறுகோல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சோபிதராஜ் குடும்பத்தினரோடு, ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனைக்கு சென்றிருந்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மேல்மாடி மற்றும் கீழ் தளத்தில் இருந்த பீரோக்களில் வைத்திருந்த 60 பவுன் நகைகள், ரூ.65 ஆயிரத்தையும் எடுத்துச் சென்றனர்.


இந்த சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் திருவட்டார் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கம், சப்–இன்ஸ்பெக்டர் சத்திய சோபனம் ஆகியோர் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.


இந்த நிலையில் திருவட்டார் அருகே குட்டைக்குழி பகுதியை சேர்ந்தவர் விஜூ அருள் (வயது 23). இவர் இரவிபுதூர்கடை பகுதியில் சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வருகிறார். தெற்றையை சேர்ந்தவர் எபனேசர் (28). இவர் வியன்னூரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்தநிலையில் தனிப்படை போலீசாருக்கு விஜூ அருள் மற்றும் எபனேசர் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 2 பேரும் சேர்ந்து திருவட்டார் பகுதியில் வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து, நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அந்த நகைகளை பளுகல் பகுதியில் உள்ள ஒரு அடகு கடையில் விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து விஜூ அருள், எபனேசர் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இருவரும் கொடுத்த தகவலின் பேரில் அடகு கடையில் விற்பனை செய்த 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் கொள்ளையர்கள் வசம் இருந்த ரூ.50 ஆயிரமும் மீட்கப்பட்டது.

இந்த வழக்கில் துப்பு துலக்கியது தொடர்பாக போலீசார் கூறும் போது, திருவட்டார் பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் ஒரே கும்பல்தான் அங்கு கைவரிசை காட்டி வந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம். அதுவும் அந்த பகுதியை பற்றி நன்கு தெரிந்தவர்கள்தான் கொள்ளையடித்துள்ளனர். எனவே குறுகிய காலத்தில் வசதி படைத்தவர்கள் போல் மாறியது யார்? என்று ரகசியமாக கண்காணித்தோம். அப்போதுதான் விஜூ அருள், எபனேசர் ஆகிய 2 பேர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரும் பேக்கரி கடை நடத்தி வந்தாலும், ஒரு சில வாரங்களில் அவர்களின் நடவடிக்கைகளில் மாறுதல் இருந்தது. இருவரும் ஆடம்பரமாக சுற்றித் திரிந்துள்ளனர். எனவே அவர்களை பிடித்து விசாரித்த போது, திருவட்டார் பகுதிகளில் தொடர் கொள்ளையில் இருவரும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் மூலம் 100 பவுன் நகைகளும், ரூ.50 ஆயிரமும் மீட்கப்பட்டுள்ளன. ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுதான் இருவரும் கொள்ளையர்களாக மாறி உள்ளனர். அவர்களுக்கு வேறு ஏதாவது கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றனர்.

நகைகளை கொள்ளையடித்து விற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பேக்கரி கடை உரிமையாளர்கள் 2 பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்