குப்பையில் ஆதார் கார்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்: தபால்காரரிடம் அதிகாரிகள் விசாரணை

குப்பையில் கிடந்த ஆதார் கார்டுகள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தபால்காரரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-18 22:00 GMT
திருப்பூர்,

பொங்கலூர் அருகே அலகுமலை கிராமத்தில் குப்பையில் ஆதார் கார்டுகள், எல்.ஐ.சி. அலுவலக கடிதங்கள், தொலைபேசி பில்கள், கல்லூரிகளில் இருந்து மாணவர்களுக்கு அனுப்பிய கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு தபால்கள் கொட்டுப்பட்டு இருந்தன. இவற்றை திருப்பூர் தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். பின்னர் அவைகளை சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணியிடம் ஒப்படைத்தனர். அதையடுத்து அந்த கடிதங்கள் அனைத்தும் திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதனிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து கண்காணிப்பாளர் கோபிநாதன் கூறியதாவது:-

எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதங்களை ஆய்வு செய்ததில் அவை அனைத்தும் திருப்பூர் காந்திநகர் தபால்நிலையத்தில் இருந்து தபால்காரர் மூலம் பட்டுவாடா செய்வதற்காக 2016-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017-ம் ஆண்டு ஜனவரி ஆகிய 2 மாதங்களில் அனுப்பப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. அவைகளில் சாமுண்டிபுரம், சிறுபூலுவபட்டி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முகவரிகளே உள்ளன. தபால் நிலையத்தில் இருந்து எடுத்து சென்ற கடிதங்கள், ஆதார்காடுகள், தபால்காரர் உரியவர்களுக்கு வழங்காமல் தற்போது அதை குப்பையில் வீசி உள்ளதாக தெரிகிறது.

அந்த கடிதங்களை காந்திநகர் தபால் நிலையத்துக்கு கொண்டு சென்ற எங்கள் அதிகாரிகள் அங்கு நடத்திய விசாரணையில் அந்த கடிதங்களை பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் சென்றவர் தற்காலிக ஊழியர் என்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இவரை சிபாரிசு செய்தவர் யார்? திருப்பூர் காந்தி நகரில் இருந்து அந்த கடிதங்கள் அலகுமலைக்கு சென்றது எப்படி? ஆகியவை குறித்து சம்பந்தப்பட்ட தபால்காரரிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டுகள் மற்றும் தபால்கள் பட்டுவாடா செய்யும் பணி உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆதார்கார்டை பெறுவதற்காக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் பொறுப்பற்ற தபால்காரரின் இந்த செயல் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எங்கள் அதிகாரிகள் விசாரணை அறிக்கையை என்னிடம் சமர்ப்பித்த உடன் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்