வடக்கு திட்டங்குளம் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ‘டேப்லெட்’ மூலம் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம்
கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் அரசு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களுக்கு, ‘டேப்லெட்’ மூலம் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே, வடக்கு திட்டங்குளம் அரசு பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவர்களுக்கு, ‘டேப்லெட்’ மூலம் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
டேப்லெட் மூலம் கற்பித்தல் முறை
தமிழக கல்வித்துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் பள்ளிக்கூட கல்வி கற்பிக்கும் முறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதல்கட்டமாக, அரசு பள்ளிக்கூடங்களில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘டேப்லெட்’ மூலம் கல்வி கற்பித்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த முறை மாநிலம் முழுவதும் 13 மாவட்டங்களில் 173 அரசு பள்ளிக்கூடங்களில் 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு டேப்லெட் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் ஆர்வம்
தற்போது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியனில் உள்ள வடக்கு திட்டங்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளிக்கூடத்தில் இந்த முறையில் கல்வி கற்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1, 2, 3–ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு டேப்லெட் மூலம் கல்வி கற்பிக்கப்படுவதுடன், தேர்வு எழுதவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மனப்பாடம் செய்தல், எழுதுதல் போன்றவை இல்லாமல் தானே கற்கும் முறையில் இருப்பதால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எளிதாக இந்த முறையை பின்பற்றி கற்று வருகின்றனர். இந்த முறையில் 40 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வும், 20 மதிப்பெண்களுக்கு டேப்லெட் மூலம் தேர்வும் நடத்தப்படுகிறது.
பெற்றோர்கள் வரவேற்பு
மேலும் இந்த முறையில் மாணவர்களுக்கு பாடல், கதை, படங்கள் மூலம் கற்பிக்கும் வாய்ப்பும் உள்ளது. அத்துடன், பாடங்கள் தொடர்பாக அதிக அளவில் தகவல்களை தேடல் செய்தும், தகவல்களை பெறும் வசதியும் ‘டேப்லெட்டில்’ உள்ளது.
பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி மேற்பார்வையில், ஆசிரிய பயிற்றுநர் நாகஜோதி மூலம் டேப்லெட் மூலம் மேற்கண்ட வகுப்பறை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த முறையில் கல்வி கற்க மற்ற வகுப்பு மாணவ, மாணவிகளும் ஆர்வமாக உள்ளனர். இதை தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு இந்த முறையில் கல்வி கற்பிக்கும் முறையை அறிமுகம் செய்ய பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் முயற்சி எடுத்து வருவது, அந்த பகுதி பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.