போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி பிடிபட்டார்

சங்கரன்கோவிலில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி நேற்று பிடிபட்டார்.

Update: 2018-04-18 20:30 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி நேற்று பிடிபட்டார்.

தப்பி ஓட்டம் 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள கோமதிமுத்துபுரத்தை சேர்ந்தவர் முனியராஜ் (வயது 39). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் பால்ராஜ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பால்ராஜ் தாக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியராஜை கைது செய்து நேற்று முன்தினம் மதியம் சங்கரன்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். அதற்கு முன்பு வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக புறப்பட்ட போது, முனியராஜ் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். மேலும் இதுதொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாரும் தனிப்படை அமைத்து முனியராஜை தேடி வந்தனர்.

பிடிபட்டார் 

இந்த நிலையில் நேற்று சங்கரன்கோவில் அருகே குவளைக்கண்ணி பஸ்நிறுத்தத்தில் முனியராஜ் நின்று கொண்டிருப்பதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, முனியராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் செய்திகள்