ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2018-04-18 20:45 GMT
தென்திருப்பேரை, 

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சித்திரை திருவிழா 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமும், வியாழன் தலமுமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சுவாமி பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.

காலை 7 மணிக்கு ஆழ்வார்திருநகரி ரங்கநாத ராமானுஜர் ஜீயர் முன்னிலையில், கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் விசுவநாத், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

26–ந்தேதி, தேரோட்டம் 

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

5–ம் திருநாளான வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது. 9–ம் திருநாளான 26–ந்தேதி (வியாழக்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது. 10–ம் திருநாளான 27–ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.

மேலும் செய்திகள்