நிலவில் ஆய்வு மேற்கொள்ள சிறிய விண்கலத்தை உருவாக்கி வரும் மாணவர்கள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மைய நிறுவனர் ஸ்ரீமதி கேசன் தகவல்

நிலவில் ஆய்வு மேற்கொள்ள மாணவர்கள் சிறிய விண்கலத்தை உருவாக்கி வருவதாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மைய நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறினார்.

Update: 2018-04-18 21:00 GMT
தூத்துக்குடி, 

நிலவில் ஆய்வு மேற்கொள்ள மாணவர்கள் சிறிய விண்கலத்தை உருவாக்கி வருவதாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மைய நிறுவனர் ஸ்ரீமதி கேசன் கூறினார்.

விண்வெளி ஆராய்ச்சி 

உலகின் மிகச்சிறிய செயற்கைகோளான கலாம்சாட்டை வடிவமைத்த சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மையம் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா பல சாதனைகளை படைத்து வருகிறது. ஆனாலும் விண்வெளி ஆராய்ச்சி என்றதும் நாசா தான் பலருக்கு நினைவுக்கு வருகிறது. இந்த நாசாவில் 60 சதவீதம் பேர் இந்திய விஞ்ஞானிகள்தான் பணியாற்றி வருகின்றனர். இந்த விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா பயிற்சி மையத்தை உருவாக்கி அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களை தேர்வு செய்து விண்வெளி ஆராய்ச்சி பயிற்சி வழங்கி வருகிறோம்.

இதற்காக பள்ளிக்கூட அளவிலான இளையோர்களுக்கான அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கிறோம். இதுவரை 1,500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் நாசா, ரஷ்யாவின் யூரோ விண்வெளி ஆராய்ச்சி மையம், இஸ்ரோ ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர்.

செயற்கைகோள் 

இந்த பயிற்சி மையத்தின் மூலம் ஏற்கனவே பலூன் சாட்டிலைட், ஸ்கைசாட், கலாம் சாட் ஆகிய செயற்கைகோள்கள் மாணவர்கள் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. கலாம் சாட் உலகிலேயே மிகவும் சிறிய செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோள் முற்றிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. நாசா மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22–ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டது. 64 கிராம் எடை கொண்ட இந்த செயற்கைகோள், 3டி தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. இந்த செயற்கைகோளில் உள்ள 10 சென்சார்களும் வெற்றிகரமாக விண்ணில் செயல்பட்டன. இது போன்று சிறிய செயற்கைகோள்கள் தயாரிப்பதால் செலவை குறைக்க முடியும். இஸ்ரோவும், மாணவர்களின் மீதும் நம்பிக்கை வைத்து, அவர்கள் தயாரிக்கும் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.

விண்கலம் தயாரிப்பு 

தற்போது, லூனார் எக்ஸ்பிரைஸ் என்னும் நிறுவனம் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் விண்கலத்தை தயாரித்து அனுப்பும் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டிக்கு உலக அளவில் 5 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் இளமையான குழுவாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் குழுவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் 15 மாணவர்கள் அடங்கிய குழு விண்கலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வருடத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்வதற்கான அதிநவீன தொழில்நுட்ப கருவிகளும் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்