தூத்துக்குடி அருகே சோரீஸ்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
தூத்துக்குடி அருகே சோரீஸ்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே சோரீஸ்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர்.
அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதே போன்று பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்திய £(செக்குலர்) கட்சி சார்பில் மடத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் சிங்காரவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிசெல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
கடந்த 23 ஆண்டுகளகாக இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையான கந்தக டை ஆக்சைடு காரணமாக தூத்துக்குடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காத நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆலையை மூடக்கோரி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகையால் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.