கோவில்பட்டியில் தூய்மை பாரதநாள் விழா அமைச்சர் கடம்பூர் ராஜூ சுகாதார பணிகளை தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ சுகாதார பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற தூய்மை பாரத நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ சுகாதார பணிகளை தொடங்கி வைத்தார்.
தூய்மை பாரதநாள் விழா
கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப் பள்ளியில் கிராம சுயாட்சி இயக்கம் சார்பில், தூய்மை பாரத நாள் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
பள்ளிக்கூடம் அருகில் சுகாதார பணிகளை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் அவர், 36 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர்களை வழங்கினார். பின்னர் அவர், தூய்மை பாரத பிரசார வாகனம் மற்றும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் உதவிகள் மற்றும் கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
வீடுதோறும் கழிப்பறை திட்டம்
விழாவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பேசுகையில், ‘ தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 பஞ்சாயத்துகளில் 1 லட்சத்து 70 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது. வீடுதோறும் கழிப்பறை கட்டும் திட்டத்தில் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தை பிடித்துள்ளது. கழிப்பறைகளை சுத்தமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீர் பாத்திரங்கள், தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பாக சோப்பு மூலம் கைகளை நன்றாக கழுவ வேண்டும். பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், பொருட்களை குப்பைகளில் வீசாமல், துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும்’ என்று கூறினார்.
விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், தாசில்தார் பரமசிவன், வட்டார மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, இயக்க மேலாண்மை இணை இயக்குனர் ரேவதி, யூனியன் ஆணையாளர்கள் பால அரிஹரமோகன், முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டேங்கர் லாரியில் தண்ணீர்
முன்னதாக கோவில்பட்டி நகரசபை 36 வார்டுகள் மற்றும் சாலையோரங்களில் ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை சார்பில் 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. அவற்றுக்கு தண்ணீர் பாய்ச்சும் வகையில், டேங்கர் லோடு ஆட்டோவை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.