சங்கரன்கோவில் அருகே துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.5½ லட்சம் கொள்ளை
சங்கரன்கோவில் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.5½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.5½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–
தனியார் நிறுவன அதிகாரி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அம்மா நகரை சேர்ந்தவர் யாகப்பன். இவருடைய மகன் பாலமுருகன் (வயது 45). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள தனியார் அட்டை நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பொள்ளாச்சியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக உள்ளார். மகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். இதனால் பாலமுருகன் மட்டும் வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
50 பவுன் கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவு உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் மகளின் படிப்பு செலவுக்கு வைத்து இருந்த ரூ.5½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு, அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் வேலைக்கு சென்ற பாலமுருகன் இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். பின்னர் மயக்கம் தெளித்து எழுந்தார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து அவர் உடனடியாக சங்கரன்கோவில் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து சென்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த வீடு சங்கரன்கோவில்–ராஜபாளையம் சாலையில் உள்ள புறநகர் பகுதியில் ஒதுக்குபுறமாக உள்ளது. மேலும் வீட்டில் பாலமுருகனை தவிர வேறு ஆட்கள் இல்லை. எனவே இதை அறிந்த மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
சங்கரன்கோவில் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.