காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அ.ம.மு.க. சார்பில் திட்டமிட்டபடி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.;
அறச்சலூர்,
தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் அமைக்கப்பட்ட அவருடைய சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுச்செயலாளர் சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் வீரத்துக்கு பெயர் பெற்ற தீரன் சின்னமலையின் மண்ணுக்கு சொந்தமானவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவியை கொடுத்தனர். ஆனால் அவர்கள் துரோகம் செய்து விட்டனர். துரோகம் செய்தவர்களை வாக்காளர்கள் பார்த்துக்கொள்வார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) கரூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
போலீசார் அனுமதி அளிக்காத பட்சத்தில் திட்டமிட்டபடி கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அந்த ஆர்ப்பாட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மொடக்குறிச்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பேட்டை சின்னு, முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, புறநகர் மாவட்ட செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.