மாணவிக்கு பாலியல் தொல்லை சர்வதேச பள்ளி நிர்வாகி சிறையில் அடைப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்வதேச பள்ளி நிர்வாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2018-04-17 21:23 GMT
மும்பை,

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான சர்வதேச பள்ளி நிர்வாகி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து செசன்ஸ் கோர்ட்டில் சரண் அடைந்தார் இதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மும்பை அந்தேரியில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்த 3 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் அறங்காவலர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாட்ரிக் பிரில்லியன்ட் என்பவர் கடந்த நவம்பர் மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதே மாதம் அவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பாட்ரிக் பிரில்லியன்டின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். சுப்ரீம் கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்ததுடன், 3 நாட்களில் சரண் அடைய உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் தின்தோஷி செசன்ஸ் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நீதிபதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து பாட்ரிக் பிரில்லியன்ட் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்