பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்,
பெரியகுளத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த அருவி சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இந்த அருவிக்கு செல்லும் வழி நெடுகிலும் மாந்தோப்புகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.
அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் போதெல்லாம் இங்கு கூட்டம் அலைமோதும். கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை பெய்தால் அருவிக்கு தண்ணீர் வரத்து இருக்கும். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது அருவியில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. ஆர்வமுடன் அருவியில் குளித்து செல்கிறார்கள்.