ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.1 லட்சம் அபேஸ்

ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பண்ருட்டி விவசாயி வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-04-17 22:30 GMT
பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 56), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதேஊரை சேர்ந்த சசிதரன்(26) என்பவருடன் பணம் எடுப்பதற்காக பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். இவர்கள் 2 பேருக்கும் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால், அப்போது அங்கிருந்த ஒருவரிடம் ரங்கசாமி தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரகசிய எண்ணை தெரிவித்து பணம் எடுத்து தருமாறு கூறினார். இதையடுத்து அந்த நபர் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணத்தை எடுத்து கொடுத்து விட்டு, ரங்கசாமியிடம் போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்து சென்றுவிட்டார். இதனை அறியாத ரங்கசாமி பணத்தையும், போலி ஏ.டி.எம். கார்டையும் வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரங்கசாமி மீண்டும் பணம் எடுப்பதற்காக நண்பர் ஒருவருடன் பண்ருட்டி ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அவர் நண்பர் மூலம் தனது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றபோது பணம் எடுக்க முடியவில்லை. மேலும் வங்கி இருப்பு குறித்த தகவலும் பெற முடியவில்லை. உடனே ரங்கசாமி தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று, தான் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்து இருப்பு விவரம் குறித்து கேட்டுள்ளார். அப்போது அதிகாரிகள் இது உங்களுடைய ஏ.டி.எம். கார்டு இல்லை என கூறி, ரங்கசாமியின் வங்கி கணக்கை சோதனை செய்தனர்.

அப்போது அவருடைய கார்டை பயன்படுத்தி வேலூர், திருத்தணி, காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது தான் ரங்கசாமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் எடுக்க பண்ருட்டி ஏ.டி.எம் மையத்துக்கு சென்றபோது, பணம் எடுத்து தர உதவி செய்த மர்மநபர், தனது ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக போலி ஏ.டி.எம். கார்டை தன்னிடம் கொடுத்திருப்பதும், தனது உண்மையான கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து ரங்கசாமி பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவத்தன்று ஏ.டி.எம். மைய கண்காணிப்பு கேமராவில் ரங்கசாமியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்த மர்மநபரின் உருவம் பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பணம் எடுக்க வந்த விவசாயியிடம் பணம் எடுத்து தர உதவி செய்து, போலி ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.1 லட்சத்தை மர்மநபர் ஒருவர் அபேஸ் செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்