சென்னையில் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு, தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்

சென்னையில் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் கூறினார்.;

Update:2018-04-18 04:30 IST
திருச்சி,

தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். சட்டப்பல்கலைக்கழகம், இசைக்கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமானமாகும். இந்த 3 துணைவேந்தர்களின் நியமனங்களுக்கும் பாரதீய ஜனதா அரசின் பெரும்புள்ளிகள் உடந்தையாக இருந்து உள்ளனர். எனவே இந்த முறைகேடுகள், ஊழல், பண பரிவர்த்தனை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியையின் வாட்ஸ்-அப் உரையாடலில் மாணவிகளிடம் தாத்தா போன்றவருடன் நான் நெருக்கமாக புகைப்படம் எடுத்தேன் என்று கூறி இருக்கிறார். அந்த தாத்தா யார்? உயர் கல்வி துறை அமைச்சரின் உத்தரவை பெறாமல் கவர்னர் மாளிகையில் இருந்து சந்தானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டது ஏன்? பேராசிரியை நிர்மலா தேவியை இப்படி பேச நிர்ப்பந்தம் செய்தது யார்? எனவே கவர்னரின் உதவியாளர், அலுவலகத்தில் உள்ளவர்கள் யார் யாருடன் பேசினார்கள் என்பது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளியில் வரும். சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொள்ளலாம்.

கவர்னர் மாளிகையில் என்ன நடக்கிறது? அது ஒரு மர்ம மாளிகை போன்று உள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக ஆசை வார்த்தை கூறிய பேராசிரியையின் பின்புலத்தில் யார் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். நேர்மையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இந்த பிரச்சினையில் சிக்கி சந்தேகத்திற்கு ஆளாகி உள்ள தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும். பிரதமரும், ஜனாதிபதியும் கலந்து பேசி தமிழக கவர்னரை டிஸ்மிஸ் செய்யவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னையில் நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு தமிழக கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்