மருத்துவ மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற முன்வர வேண்டும்

மருத்துவ மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமங்களில் பணியாற்ற முன்வர வேண்டும் என எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி கூறினார்.

Update: 2018-04-17 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி கலந்து கொண்டு 96 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

மருத்துவ பட்டம் பெறுவது மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தந்தவர்கள் பெற்றோர்கள் என்பதை மாணவ, மாணவிகள் உணர வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்ற டாக்டர்கள் முன்வர வேண்டும். டாக்டர்கள் மட்டுமே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

கிராமப்புறங்களில் மருத்துவர்கள் குறைவான அளவில் இருப்பதாலேயே மருத்துவம் படிக்காத பலர் நோய்களுக்கான ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர். எனவே மருத்துவம் படித்த மாணவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமப்புற மக்களிடையே பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மருத்துவ தொழிலில் நெறிமுறைகளுக்கான ‘ஹிப்போகிரட்டிஸ்’ உறுதிமொழி ஏற்றனர். விழாவில் மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின்ஜோ, எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர் பாலசுப்பிரமணியன், திருவாரூர் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் ராஜா, துணை கண்காணிப்பாளர் கண்ணன், விடுதி காப்பாளர்கள் சிவக்குமார், வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்