பெண் மானபங்கம்: தட்டிக்கேட்ட சகோதரர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு 8 பேருக்கு வலைவீச்சு

ஆடையை கிழித்து இளம் பெண்ணை மானபங்கப்படுத்தியதை தட்டிக்கேட்ட சகோதரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-04-17 22:15 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் கல்யாண குமார். இவர், கடந்த 15-ந் தேதி அவரது நண்பர்கள் சிலரோடு சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணை கேலி செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார், ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கூறியுள்ளார். மேலும், பெரம்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்ற போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி கூறி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கல்யாணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை ரோட்டிற்கு தூக்கி வந்து அவர் அணிந்திருந்த ஆடையை கிழித்து மானபங்கப்படுத்தியதாக தெரிகிறது.

அரிவாள் வெட்டு

இதனை அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்கள் 2 பேர் சேர்ந்து தட்டிக்கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அந்த பெண்ணின் சகோதரர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டினர்.

பின்னர் இரும்பு கம்பி மற்றும் உருட்டு கட்டையாலும் தாக்கினர். இதனை தடுக்க சென்ற அந்த பெண்ணும் தாக்கப்பட்டார். இதில் காயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 பேர் மீது வழக்கு

இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்யாணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் தெய்வநாயகம், கணிவண்ணன், கரிகாலன், மாணிக்கம், தினேஷ், குமார், விஜயபாலன் ஆகிய 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்