விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை

விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-04-17 22:45 GMT
அரவக்குறிச்சி,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பவர் கிரிட் நிறுவனத்திலிருந்து கரூர் மாவட்டம் க.பரமத்தியில் உள்ள பவர் கிரிட் நிறுவனத்துக்கு உயர் அழுத்த மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக பவர் கிரிட் நிறுவனம் உயர் அழுத்த மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக க.பரமத்தி, தென்னிலை, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து அதன் மூலம் கம்பி வழித் தடத்தின் மூலம் மின்சாரத்தை எடுத்துச்செல்ல திட்டமிடப் பட்டுள்ளது.

ஆனால், தங்களது விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் மற்றும் மின் வழித்தடம் அமைத்தால் தங்களது விளைநிலங்களில் விவசாயம் பாதிக்கப்படும், மேலும் புதிதாக கிணறு உள்ளிட்டவை அமைக்க முடியாது என அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக நேற்று அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பவர் கிரிட் நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர்.

கூட்டத்தில் பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் உயர் அழுத்த மின்பாதை மற்றும் உயர் மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறினர்.

இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைநிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் மற்றும் மின் பாதை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், மேலும் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுரங்கள், மின் தடங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நில உரிமையாளர்களே பொறுப்பு என விதிமுறைகள் விவசாயிகளை அச்சுறுத்துவதாக உள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும் விளை நிலங்கள் வழியாக மின் வழிப்பாதை அமைப்பதற்கு பதிலாக, சாலையோரத்தில் பூமிக்கடியில் கேபிள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்லும் வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதாக கூறினார். 

மேலும் செய்திகள்