வன விலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது.

Update: 2018-04-17 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் அனைத்தும் வறண்டு போய் உள்ளன. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.

இதில் மான்கள் அடிக்கடி நாய்கள் கூட்டத்தில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் தண்ணீருக்காக ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷ் தலைமையில் வனவர் ராஜேந்திரன், வனக்காப்பாளர் கங்கை அமரன், வனக்காவலர் நாராயணன் மற்றும் வனக்குழுவினர் தொகரப்பள்ளி காப்பு காட்டில் உள்ள தொட்டிகளில் டிராக்டர் மூலமாக தண்ணீர் நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- டிராக்டர் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்புகிறோம். இந்த தண்ணீர் சுமார் 10 நாட்கள் வரை இருக்கும். இதன் மூலம் வன விலங்குகள் இந்த இடத்திற்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. கோடை முடியும் வரையில் இவ்வாறு தண்ணீர் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்