மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை கோர்ட்டில் ஆஜர்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு

கோவை கோர்ட்டில் ஆஜரான மாவோயிஸ்டுகள் 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-17 21:30 GMT
கோவை,

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளான ரூபேஷ், அவருடைய மனைவி ஷைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கோவை கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ரூபேஷ் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும், அங்குள்ள கோர்ட்டுகளில் ஆஜர்படுத்துவதற்கு வசதியாக ரூபேஷ், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மீதமுள்ள 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகள் வாங்கியது உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தும் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருக்கும் ஷைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.

அதுபோன்று கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் இருக் கும் ரூபேஷ் கோவைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர்கள் 5 பேரும்கோவை மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர் ஜூன் 6-ந் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார். இதையடுத்து அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று சிறையில் அடைத்தனர்.

முன்னதாக மாவோயிஸ்டுகள் கோர்ட்டுக்கு வந்தபோதும், கோர்ட்டை விட்டு வெளியேறியபோதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்புக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்