பெண்கள் சுயஉதவிக்குழுவிடம் சமுதாயக் கூடங்கள் ஒப்படைப்பு, அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்

முறையாக பராமரிப்பதற்காக அரசு சார்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பெண்கள் சுயஉதவிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.;

Update: 2018-04-17 22:30 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த நிரவி கிராமத்தில், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் தைக்கால் தெரு, ரூ.20 லட்சம் செலவில் ஆற்றங்கரைபேட் என இரண்டு இடங்களில் மொத்தம் ரூ.35 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடங்கள் கட்டப்பட்டன. அவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ, காரைக்கால் நகராட்சி ஆணையர் சுதாகர், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, இரண்டு சமுதாயக் கூடங்களையும் திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த காலங்களில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததாலும், மின் கட்டணம், தண்ணீர் வரி போன்றவை செலுத்தாத காரணத்தாலும் தற்போது அவை பயன்பாட்டிற்கு உகந்த வகையில் இல்லை. இதனைக்கருத்தில் கொண்டு, இனிமேல் கட்டப்படக்கூடிய சமுதாயக் கூடங்களை அரசிடம் பதிவு பெற்று, சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைத்து அதன் மூலம் பராமரிப்பு, நிர்வாகம் செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரு சமுதாயக் கூடங்களும் பெண்கள் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இதன்மூலம் வரக்கூடிய வருவாயைக் கொண்டு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்