சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி, 158 பேர் கைது

புதுவை தொழிலாளர் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் 158 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-17 22:45 GMT
புதுச்சேரி,

புதுவை மாநில சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று காலை ராஜீவ்காந்தி சிலை அருகில் ஒன்று கூடினர். அங்கிருந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். சி.ஐ.டி.யு. செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் கலியன், அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க தலைவர் ராமசாமி, பொருளாளர் குமார், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் மதிவாணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் வழுதாவூர் சாலை வழியாக தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் அருகே சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கோரிமேடு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த இடத்திலேயே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள், புதுவையில் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், விண்ணப்பம் அளித்த தொழிலாளர்களை கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கவேண்டும். தீபாவளி உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி உதவி, இதர நலப்பயன்களை உடனே வழங்க வேண்டும், மருத்துவம் ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 158 பேரை போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்