காரைக்குடி, கோட்டையூர் ரெயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Update: 2018-04-17 22:30 GMT
காரைக்குடி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலும் சில இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையில் கடந்த வாரம் சிவகங்கை ரெயில் நிலையத்தில் ஊர் அறிவிப்பு பலகை மற்றும் விளம்பர போர்டுகளில் இருந்த இந்தி எழுத்துகளை மர்ம நபர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் அந்த பலகையில் காவிரி என்று எழுதியிருந்தனர். இந்தநிலையில் நேற்று காரைக்குடி மற்றும் கோட்டையூர் ரெயில் நிலையங்களில் ஊர் அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை மர்ம நபர்கள் கருப்பு மை பூசி அழித்துவிட்டு, பக்கத்தில் காவிரி என்று எழுதியுள்ளனர். இதுகுறித்து காரைக்குடி ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்