சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து, கடலூரில் மகளிர் காங்கிரசார் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
காஷ்மீரில் சிறுமி ஆஷிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய, மாநில அரசுளை கண்டித்தும், தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் அவருக்கு பின்னணியில் உள்ள பெரும்புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கடலூர் மாவட்ட மகளிர் காங்கிரசார் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கடலூர் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி கலைசெல்வி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மங்கள லட்சுமி, பஞ்சவர்ணம், அமுதா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வசந்தா வரவேற்று பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திர சேகரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலை அரசன், தொழிலாளர் காங்கிரஸ் ராமராஜ், மீனவர் அணி கார்த்திகேயன், வட்டார தலைவர் ராஜாராம், நகர செயலாளர் உமாபதி, முன்னாள் வட்டார தலைவர் ராமதுரை, ஜெயமூர்த்தி பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.