பொதுமக்கள் அனைவரும் வங்கிக்கணக்குகள் தொடங்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு

அரசின் சலுகைகளை பெற பொதுமக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.;

Update:2018-04-18 04:00 IST
பனப்பாக்கம், 

காவேரிப்பாக்கம் அருகே ஓச்சேரியில் உள்ள இந்தியன் வங்கிக்கிளை சார்பில் மத்திய அரசின் ‘கிராம சுவராஜ் அபியான்’ திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் வங்கி அலுவலக கட்டிடத்தில் நேற்று நடந்தது.

அரசின் சலுகைகள் பெற பொதுமக்கள் அனைவரும் வங்கிக் கணக்குகள் தொடங்க வேண்டும். இதனால் மத்திய அரசின் நலத்திட்டங்களை நீங்கள் வங்கிக் கணக்கின் மூலம் நேரடியாக பெற்று பயன்பெறலாம். பள்ளி மாணவர்கள் வங்கிக் கணக்குகள் தொடங்குவதன் மூலம், அரசின் கல்வி உதவித்தொகையை தங்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக பெறலாம்.

பிரதம மந்திரியின் ‘ஜீவன் ஜோதி பீமா யோஜனா’ திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் வருடாந்திர பிரீமியம் ரூ.330 மட்டுமே செலுத்தி காப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சம் வரை பயனாளிகள் பெறலாம்.

இதேபோன்று பிரதம மந்திரியின் ‘சுரக்‌ஷா பீமா யோஜா’ திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள பயனாளிகளுக்கு விபத்து காப்பீட்டுத்திட்டம் உள்ளது. இத்திட்டத்திற்கு வருடாந்திர பிரீமியம் தொகையாக ரூ.12 மட்டுமே செலுத்தி காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம் வரை பெறலாம்.

வேலூர் மாவட்டத்தில் பின்தங்கிய ஊராட்சிகளாக 74 ஊராட்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் மே 5-ந் தேதிக்குள் ‘கிராம சுவராஜ் அபியான்’ திட்டத்தின் மூலம் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தங் களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக பெறும் வகையில் 100 சதவீத வங்கிக் கணக்குகள் தொடங் கப்படும்.

இதில் மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன், இந்திய அரசின் கால்நடைத்துறை துணைச் செயலாளர் தீபக்சீதி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சுந்தரராஜன், முன்னோடி வங்கிகளின் மேலாளர் தாமோதரன், முதன்மை மேலாளர் சுந்தரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, ஓச்சேரி இந்தியன் வங்கிக் கிளை மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்தில் சேர பலர் மனு அளித்தனர்.

ஓச்சேரி இந்தியன் வங்கிக்கிளை சார்பில் வேகாமங்கலம், மாமண்டூர், கரிவேடு, உத்திரம்பட்டு, தர்மநீதி, ஈராளச்சேரி ஆகிய 6 கிராமங்கள் பின்தங்கிய ஊராட்சிகளாக கண்டறியப் பட்டுள்ளது. இந்த 6 ஊராட்சிகளில் மே 5-ந் தேதிக்குள் 100 சதவீத வங்கிக் கணக்குகள் தொடங்கப்படும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்