மதுரை விமான நிலையத்தில் ரூ.12¾ லட்சம் தங்கம் பறிமுதல்: சிவகங்கை வாலிபர் சிக்கினார்

மதுரை விமான நிலையத்தில் ரூ.12¾ லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்துடன் சிவகங்கை வாலிபர் சிக்கினார்.

Update: 2018-04-17 23:00 GMT
மதுரை,

சிங்கப்பூரில் இருந்து மதுரை வரும் ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த உடன் அதில் வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபு தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராம்குமார் (வயது 35) என்பவர் கொண்டு வந்த ஒரு பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் ஒரு எந்திரம் இருந்தது. அதனை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த எந்திரத்தை தனித்தனியாக கழற்றி அதன் பாகங்களை பார்த்தபோது, அதில் உருளை வடிவிலான 2 தங்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதிகாரிகள், அதில் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்து ராம்குமாரை கைது செய்தனர்.

இது குறித்து சுங்கத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ் பாபு கூறுகையில், நகை உள்ளிட்ட சிறு, சிறு பொருட்களை பாலீஷ் செய்யும் எந்திரத்தில் மறைத்து வைத்து ராம்குமார் என்பவர் கொண்டுவந்த 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்திருக்கிறோம். இதன் மதிப்பு ரூ.12 லட்சத்து 71 ஆயிரம்.

இது தொடர்பாக ராம்குமாரிடம் விசாரித்தபோது, இந்த பெட்டியை மதுரையில் ஒருவர் வாங்கிக் கொள்வார் என்று சிங்கப்பூரில் இருந்து ஒருவர் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். ராம்குமார் தனது தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதையொட்டி சொந்தஊருக்கு வந்திருக்கிறார். வரும் வழியில் தான் சிக்கி கொண்டார். கடத்தல்காரர்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி வந்த அவர் தற்போது சுங்கத்துறை அதிகாரிகளின் பிடியில் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்