சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சுப்பிரமணியன் தகவல்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-04-17 22:15 GMT
விழுப்புரம், 

2018-19-ம் கல்வியாண்டிற்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 345 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் (மெட்ரிக், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) எல்.கே.ஜி., 1-ம் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 5,540 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரின் அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். நிர்ணயிக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னேர சேர்க்கை வழங்கப்படும்.நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்