தேனி உள்ள மதுபான கடைகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு

தேனி புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள 4 மதுபான கடைகளை இடமாற்றம் செய்யவும், அனுமதியின்றி பார் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-04-17 22:00 GMT
தேனி,

தேனி புதிய பஸ் நிலைய பகுதியில் ஆங்காங்கே மதுபானக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு, மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களுக்கு செல்லும் பாதையில் அடுத்தடுத்து 4 மதுபான கடைகள் அமைந்துள்ளன.

இதுமட்டுமின்றி பஸ் நிலையம் எதிர்புறத்திலும், பஸ் நிலையத்தில் இருந்து சிவாஜி நகர் செல்லும் சாலையோரமும் மதுபான கடைகள் அமைந்துள்ளன. இந்த மதுபான கடைகள் மற்றும் அதனோடு அமைந்துள்ள பார்களால் அந்த வழியாக செல்லும் அரசு அலுவலர்கள், போலீசாரின் குடும்பத்தினர், மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிகாலையில் நடைபயிற்சி செல்வோரும் இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே பஸ் நிலைய பகுதியில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள 4 மதுபான கடைகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டு உள்ளார். இதேபோல் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபான பார் நடத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்ட போது, ‘புதிய பஸ் நிலையம் எதிரே மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்லும் திட்டச்சாலையில் அமைந்துள்ள 3 கடைகள் என மொத்தம் 4 கடைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. வேறு இடம் கிடைக்காத பட்சத்தில் அந்த கடைகள் மூடப்படும்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள 90 மதுபான கடைகளில், 30 இடங்களில் மட்டுமே பார் நடத்த உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. மற்ற இடங்களில் அனுமதியின்றி பார்கள் நடத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அனுமதியின்றி நடத்தும் பார்களை மூடவும், பார் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அனுமதியின்றி பார் நடத்தினாலோ, அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்தாலோ, மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டாலோ, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அலுவலகம், போலீஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்