திருவட்டார் அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை: கைதான மாமனார் வாக்குமூலம்

திருவட்டார் அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குடிபோதையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் வெட்டி கொன்றதாக கைதான மாமனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2018-04-17 23:00 GMT
திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயந்த குமார் (வயது 37). பெயிண்டர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முக்கலம்பாடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் நிஷாவை (27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஜெயந்தகுமார், மாமனார் வீட்டின் அருகே மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  

நிஷாவுக்கும், அருமனை பகுதியை சேர்ந்த வேன் டிரைவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த மாதம் நிஷா தனது இரண்டு மகன்களையும் அழைத்து கொண்டு கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார். இதையடுத்து நிஷாவை காணவில்லை என திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி நிஷாவை அழைத்து விசாரித்தனர். அப்போது, நிஷா, கணவருடன் வாழ பிடிக்கவில்லை எனக்கூறினார். இந்த நிலையில்  போலீசார் அவரை தாயாருடன் அனுப்பி வைத்தனர். பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிஷா 3–வது நாள் மீண்டும் அங்கிருந்து வெளியேறி கள்ளக்காதலனுடன் சென்றார்.

இதனால், ஜெயந்த குமார் வேதனையடைந்தார். நிஷாவின் பெற்றோருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று தகராறு செய்த ஜெயந்த குமாரை, நிஷாவின் தந்தை மணிகண்டன் வெட்டி கொலை செய்தார். இதற்கு மணிகண்டனின் மனைவி புஷ்பகலாவும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனையும், புஷ்ப கலாவையும் கைது செய்தனர்.

கொலை குறித்து மணிகண்டன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனது மகள் நிஷாவும், ஜெயந்தகுமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வசிக்க எனது வீட்டு அருகே உள்ள நிலத்தை கொடுத்தேன். அதில் அவர்கள் வீடு கட்டி வசித்து வந்தனர். ஜெயந்த குமாருக்கு குடிபழக்கம் உண்டு. அவர் தினமும் குடித்து விட்டு வந்து எனது மகளை அடித்து சித்ரவதை செய்து வந்தார். இதனால், வேதனையுடன் இருந்த எனது மகள், வேன் டிரைவருடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

வேன் டிரைவரிடம் இருந்து பிரித்து நிஷாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ஜெயந்த குமார் எங்களிடம் வற்புறுத்தி வந்தார். பக்கத்து வீட்டில் அவர் இருந்ததால் எந்த நேரமும் இதுகுறித்து பேசி தொல்லை கொடுத்து வந்தார். இரவு குடி போதையில் வந்து என்னிடமும், எனது மனைவியிடமும் தகராறு  செய்வார்.

சம்பவத்தன்று அதிக மது போதையில் வந்த அவர் எங்களை தாக்க முயன்றார். இதில்  ஆத்திரமடைந்த நான் முதலில் கட்டையை எடுத்து ஜெயந்த குமாரை தாக்கினேன். பின்னர் அரிவாளால் வெட்டிக் கொன்றேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் ஜெயந்த குமார் கொலை வழக்கில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதற்காக அவரது மனைவி நிஷா மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்